தந்தையை இழந்த மகன் அழுகிறான்.
தாயை இழந்த மகள் அழுகிறாள்.
கணவனை இழந்த மனைவி அழுகிறாள்.
மனைவியை இழந்த கணவன் அழுகிறான்.
உடன்பிறந்தவரை இழந்தவர் அழுகிறார்.
இதில் இயற்கைக்கு மாறானது ஒன்றுமில்லை.
பாசமுள்ள மனிதனுக்குப் பிரிவு வலிக்கும். பல ஆண்டுகள் நம்முடன் வாழ்ந்த ஒருவர் இன்று இல்லை என்பதை மனம் உடனடியாக ஏற்றுக்கொள்ளாது. அவருடைய குரல், நடை, பழக்கம், அவர் அமர்ந்த இடம், அவர் பயன்படுத்திய பொருட்கள் — ஒவ்வொன்றும் நினைவைத் தூண்டும். கண்களில் கண்ணீர் வரலாம்.
இயற்கையாக வரும் கண்ணீருக்காக ஒருவரைக் குற்றவாளியாக்குவது ஶாஸ்திரத்தின் நோக்கம் அல்ல.
ஆனால் இயற்கையான துக்கம் வேறு;
துக்கத்தையே வளர்த்துக் கொண்டு வாழ்வது வேறு.
அதைவிட மோசமானது —
“உனக்கு அப்பா மேல் பாசமே இல்லையா? அழவே இல்லையே!”
“அம்மா இறந்திருக்கிறாள்; கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வரவில்லையே!”
“என்ன கல்நெஞ்சம்?”
என்று ஏற்கெனவே துக்கத்தில் இருப்பவரை மற்றவர்கள் தூண்டி அழ வைப்பது.
ஒருவர் எவ்வளவு அழுகிறார் என்பதைக் கொண்டு அவர் எவ்வளவு நேசித்தார் என்பதை அளக்க ஶாஸ்திரம் எந்த அளவுகோலையும் கொடுக்கவில்லை.
மாறாக, மரணத்திற்குப் பிறகு கட்டுப்பாடற்ற அழுகையைத் தொடர வேண்டாம் என்று நேரடியாகச் சொல்லும் பிரமாணமே நமக்குக் கிடைக்கிறது.
1. “அழுவதை விட அவருக்குரிய கிரியையைச் செய்” — யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதியின் நேரடியான கட்டளை
யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி, ப்ராயஶ்சித்த அத்யாயம், ஆஶௌச ப்ரகரணம் 3.11:
“ஶ்லேஷ்மாஶ்ரு பாந்தவைர்முக்தம்
ப்ரேதோ புங்க்தே யதோऽவஶஃ ।
அதோ ந ரோதிதவ்யம் ஹி
க்ரியாஃ கார்யாஃ ஸ்வஶக்திதஃ ॥”
இதன் கருத்து:
உறவினர்கள் விடுகின்ற கண்ணீரையும் ஶ்லேஷ்மத்தையும் ப்ரேதன் தன்னிச்சையின்றி அனுபவிக்க வேண்டியதாகிறது; ஆகையால் அழுது கொண்டிருப்பதை விடுத்து, அவருக்குரிய கிரியைகளைத் தத்தம் சக்திக்கேற்ப செய்ய வேண்டும்.
இது யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி 3.11-ல் நேரடியாக உள்ளது. மிதாக்ஷரா வியாக்யானமும், இறந்தவருக்கு நன்மையை விரும்புகிறவர்கள் அழுகையை வளர்ப்பதைவிட ஶ்ராத்தம் முதலான ஊர்த்வதைஹிக கிரியைகளைச் செய்ய வேண்டும் என்ற பொருளிலேயே இதனை விளக்குகிறது.
இதையே கருடபுராண ப்ரேதகாண்டத்திலும் காண்கிறோம்:
“அஶ்ருபாதம் ந குர்வீத
தத்த்வா தாஹஜலாஞ்ஜலிம்…”
அதைத் தொடர்ந்து,
“அதோ ந ரோதிதவ்யம் ஹி
க்ரியாஃ கார்யாஃ ஸ்வஶக்திதஃ”
என்று வருகிறது.
அதாவது, தாஹத்திற்குரிய ஜலாஞ்ஜலி முதலானவற்றைச் செய்த பின்னர் கண்ணீர் சிந்திக்கொண்டே இருப்பதைத் தவிர்த்து, செய்ய வேண்டிய கிரியைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலை அங்கே காண்கிறோம்.
இதிலிருந்து ஒரு விஷயம் மிகத் தெளிவு:
இறந்தவர்மீது நமக்குள்ள பாசத்தை நிரூபிப்பதற்கான வழி கட்டுப்பாடற்ற அழுகை அல்ல; அவருக்குச் செய்ய வேண்டிய கர்மத்தை முறையாகச் செய்வதே.
2. “நான் இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் அவரைக் காப்பாற்றியிருப்பேனே!”மரணத்திற்குப் பிறகு பலருடைய மனத்தை அதிகமாக வாட்டுவது இந்தக் குற்றவுணர்ச்சிதான்.
“அன்றைக்கே மருத்துவமனைக்கு அழைத்துப் போயிருக்க வேண்டுமோ?”
“வேறு மருத்துவரிடம் காட்டியிருந்தால்?”
“நான் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால்?”
“அந்தப் பயணத்தைத் தடுத்திருந்தால்?”
“நான் அருகிலேயே இருந்திருந்தால்?”
இப்படிப் பல “இருந்திருந்தால்…”கள் மனத்தில் உருவாகின்றன.
நாம் செய்ய வேண்டிய முயற்சியைச் செய்வது மனிதக் கடமை. உயிருடன் இருக்கும்போது மருத்துவம் செய்ய வேண்டும்; பாதுகாப்பு அளிக்க வேண்டும்; கவனித்துக்கொள்ள வேண்டும். “எல்லாம் விதி” என்று சொல்லி செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் இருப்பதை ஶாஸ்திரம் ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
ஆனால் மரணம் நிகழ்ந்துவிட்ட பிறகு,
“என்னால்தான் இவர் இறந்தார்; நான் நினைத்திருந்தால் மரணத்தையே தடுத்திருப்பேன்”
என்று தன்னையே தண்டித்துக் கொண்டிருப்பதும் சரியல்ல.
மஹாபாரதம் காலத்தின் தவிர்க்க முடியாத தன்மையை மிக அழகாகச் சொல்கிறது:
“காலஃ பசதி பூதானி
காலஃ ஸம்ஹரதே ப்ரஜாஃ ।
காலஃ ஸுப்தேஷு ஜாகர்தி
காலோ ஹி துரதிக்ரமஃ ॥”
காலமே உயிர்களைப் பரிணமிக்கச் செய்கிறது; காலமே ப்ரஜைகளைச் சம்ஹரிக்கிறது; அனைவரும் உறங்கினாலும் காலம் விழித்திருக்கிறது; காலத்தைத் தாண்டிச் செல்லுதல் அரிது என்பது இதன் கருத்து. மஹாபாரத ஸ்த்ரீபர்வம் 2.24-ல் இவ்வாக்கியம் இடம்பெறுகிறது.
அதே பகுதியில் அடுத்ததாக ஒரு அருமையான மனநலப் பாடம் போன்ற அறிவுரையும் வருகிறது:
துக்கத்தைத் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருப்பதால் அது நீங்குவதில்லை; மாறாக மேலும் வளர்கிறதுஎன்று மஹாபாரதம் எச்சரிக்கிறது.
ஆகவே,
“நான் அப்படிச் செய்திருந்தால்…”
“இப்படிச் செய்திருந்தால்…”
“நான் தான் காரணம்…”
என்று முடிவில்லாமல் தன்னையே தண்டித்துக்கொள்வது இறந்தவரை மீட்டுத் தருவதில்லை; உயிருடன் இருப்பவருடைய மனத்தையும் உடலையும் மட்டுமே சிதைக்கிறது.
3. பிறக்கும்போதே ஆயுள் நிர்ணயிக்கப்பட்டதா?இங்கே ஒரு பிரபலமான ஶ்லோகம் சொல்லப்படுகிறது:
“ஜனனீ ஜன்மஸௌக்யானாம்
வர்தினீ குலஸம்பதாம் ।
பதவீ பூர்வபுண்யானாம்
லிக்யதே ஜன்மபத்ரிகா ॥”
இவ்வரிகள் ஜன்மபத்திரிகை எழுதும் மரபில் காணப்படுகின்றன; மானஸாகரி மங்களாசரணத்திலும் இடம்பெறுகின்றன. பழைய ஜாதக ஓலைச்சுவடிகளின் தொடக்கத்திலும் இந்த ஶ்லோகம் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான பதிவுகள் உள்ளன.
இதன் பொதுவான கருத்து, ஜன்மபத்திரிகை என்பது பிறப்பு, குடும்பநிலை, பூர்வபுண்ணியத்தின் பலன்கள் முதலானவற்றை அறிய உதவும் ஒரு பதிவு என்பதாகும்.
ஆனால் இந்த ஒரு ஶ்லோகத்தைக் கொண்டே “மரண நேரம் பிறப்பிலேயே எழுதப்பட்டுவிட்டது” என்று கூறுவது துல்லியமல்ல.
அதற்குத் தனியாகப் பிரபலமான மற்றொரு வாக்கியம் உள்ளது:
“ஆயுஃ கர்ம ச வித்தம் ச
வித்யா நிதனமேவ ச ।
பஞ்சைதானி ஹி ஸ்ருஜ்யந்தே
கர்பஸ்தஸ்யைவ தேஹினஃ ॥”
அதாவது,
ஆயுள், கர்மம், செல்வம், வித்யை, நிதனம் ஆகிய ஐந்தும் ஜீவன் கர்ப்பத்தில் இருக்கும்போதே நிர்ணயிக்கப்படுகின்றன என்று இந்த நீதி வாக்கியம் கூறுகிறது. இது சாணக்யநீதியின் பரவலான பாடத்திலும் காணப்படுகிறது; பஞ்சதந்திரப் பாடத்திலும் இதே ஶ்லோகம் உள்ளது.
எனவே, மரணம் ஏற்பட்டுவிட்ட பிறகு நாம் செய்ய வேண்டியது,
“இன்னும் ஒரு மணி நேரம் முன்னால் இதைச் செய்திருந்தால் விதியையே மாற்றியிருப்பேன்”
என்று நம்மை நாமே எரித்துக் கொள்வது அல்ல.
நாம் செய்திருக்க வேண்டிய கடமையில் உண்மையான தவறு இருந்தால் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். ஆனால் மரணத்தையே முழுமையாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஒன்றாக நினைத்து ஆயுள் முழுவதும் குற்றவுணர்ச்சியில் வாழ வேண்டிய அவசியமில்லை.
4. பகவத்கீதை மரணத்தை எப்படிப் பார்க்கச் சொல்கிறது?பகவான் மிக நேரடியாகச் சொல்கிறான்:
“ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுஃ
த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச ।
தஸ்மாதபரிஹார்யேऽர்த்தே
ந த்வம் ஶோசிதுமர்ஹஸி ॥” — கீதை 2.27
பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம்; இறந்தவனுக்குப் பிறப்பு நிச்சயம்; தவிர்க்க முடியாத ஒன்றைக் குறித்து நீ அளவுகடந்து வருந்த வேண்டாம் என்பது இதன் கருத்து.
அடுத்த ஶ்லோகத்தில்:
“அவ்யக்தாதீனி பூதானி
வ்யக்தமத்யானி பாரத ।
அவ்யக்தநிதனான்யேவ
தத்ர கா பரிதேவனா ॥” — கீதை 2.28
ஜீவர்களின் நிலை பிறப்புக்கு முன்பு நம் பார்வைக்கு வெளிப்படாதது; இடையில் வெளிப்படுகிறது; மரணத்திற்குப் பிறகு மீண்டும் நம் பார்வைக்கு அப்பாற்படுகிறது; அப்படியிருக்க அளவற்ற பரிதாபம் எதற்கு? என்று பகவான் கேட்கிறான்.
இன்னும் முக்கியமாக ஆத்மாவைப் பற்றிக் கீதை கூறுகிறது:
“நைனம் சிந்தந்தி ஶஸ்த்ராணி
நைனம் தஹதி பாவகஃ ।
ந சைனம் க்லேதயந்த்யாபோ
ந ஶோஷயதி மாருதஃ ॥” — கீதை 2.23
ஆத்மாவை ஆயுதம் வெட்டுவதில்லை; அக்னி எரிப்பதில்லை; நீர் நனைப்பதில்லை; காற்று உலர்த்துவதில்லை.
எரிந்தது சரீரம்; ஆத்மா அல்ல.
இதுதான் முதலில் மனத்தில் பதிய வேண்டிய தத்துவம்.
5. “அவர் என்னை விட்டுப் போய்விட்டார்” என்பதிலிருந்து “அவருடைய சரீர சம்பந்தம் முடிந்தது” என்ற புரிதலுக்கு வர வேண்டும்நமக்கு மிகப்பெரிய துன்பம் எங்கே வருகிறது?
“என் அப்பா போய்விட்டார்.”
“என் அம்மா என்னை விட்டுப் போய்விட்டார்.”
“என் கணவர் என்னைத் தனியாக விட்டுவிட்டார்.”
என்று நினைக்கும்போதுதான்.
ஆனால் ஆத்மதத்துவம் வேறு விதமாகச் சிந்திக்கச் சொல்கிறது.
நாம் நேசித்த சரீரத்தோடு இருந்த தொடர்பு முடிந்திருக்கிறது. ஆத்மாவே அழிந்துவிட்டது என்று ஸநாதன தர்மம் கூறுவதில்லை.
எனவே துக்கத்தை மறுப்பதல்ல ஆன்மிகம்.
துக்கத்திற்குள் தத்துவத்தை நுழைப்பதுதான் ஆன்மிகம்.
6. அழாதவர் கல்நெஞ்சுக்காரரா? — நிச்சயமாக இல்லைஒருவர் தந்தையின் உடலைப் பார்த்தவுடன் கதறி அழலாம்.
இன்னொருவர் அமைதியாக நிற்கலாம்.
ஒருவர் பல நாட்கள் அழலாம்.
இன்னொருவர் குடும்பப் பொறுப்பைக் கையில் எடுத்துக்கொண்டு உடனே காரியங்களில் கவனம் செலுத்தலாம்.
இதில் யாருடைய பாசம் அதிகம் என்று யார் தீர்மானிப்பது?
கண்ணீரின் அளவைக் கொண்டு பாசத்தை அளக்க முடியாது.
சிலர் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துவார்கள்.
சிலர் மனத்திற்குள் வைத்திருப்பார்கள்.
சிலர் பகவானிடம் ஒப்படைப்பார்கள்.
சிலர் கர்த்தாவாக நின்று செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்வதில் மனதைச் செலுத்துவார்கள்.
அதனால்,
“நீ அழவே இல்லையே; உனக்குப் பாசமில்லை!”
என்று சொல்வது மிகத் தவறான அணுகுமுறை.
அதிலும் குறிப்பாக இறந்த வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் செல்பவர்கள்,
அந்தக் குடும்பத்தைத் தேற்றச் செல்ல வேண்டுமே தவிர, தேறிக்கொண்டிருப்பவர்களை மீண்டும் உடைத்து அழவைக்கச் செல்லக்கூடாது.
7. துக்கம் விசாரிப்பதன் பெயரில் மீண்டும் மீண்டும் காயத்தைக் கிளறாதீர்கள்சிலர் வீட்டிற்குள் வந்தவுடன்,
“கடைசியா என்ன சொன்னார்?”
“எப்படி இறந்தார்?”
“அப்போது நீங்க எங்கே இருந்தீங்க?”
“மருத்துவமனைக்குக் கொஞ்சம் முன்னாடியே கூட்டிட்டுப் போயிருக்கலாமே?”
“அவர் உங்களைப் பற்றித்தான் கடைசிவரை பேசினார்!”
என்று மீண்டும் மீண்டும் சம்பவத்தைச் சொல்ல வைப்பார்கள்.
அந்த வீட்டில் இருப்பவர் ஓரளவு மனத்தைத் தேற்றிக் கொண்டிருந்தாலும் மீண்டும் அதே காட்சியை மனத்தில் உருவாக்கி கதற ஆரம்பிப்பார்.
இது ஆறுதல் அல்ல; ஆறிக்கொண்டிருக்கும் காயத்தை மீண்டும் கீறுவது.
கருடபுராணப் பகுதியில் இதற்கு நேர்மாறாக ஒரு அழகான வழிகாட்டுதல் வருகிறது. இறுதிக்கிரியைக்குப் பின் கூடியிருப்பவர்களிடம் புராணம் அறிந்த ஒருவர் “ஶோகாபநோதம் குர்வீத” — அவர்களுடைய ஶோகத்தை நீக்கும் வகையில், ஸம்ஸாரத்தின் அநித்யத்துவத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.
கவனியுங்கள்:
“அழ வையுங்கள்” என்று சொல்லவில்லை.
“ஶோகத்தை நீக்குங்கள்” என்று சொல்கிறது.
இதுவே துக்கம் விசாரிக்கச் செல்பவர்களுக்கான மிகப்பெரிய பாடம்.
8. “அழுதால்தான் பாசம்” என்பது ஶாஸ்திர சித்தாந்தமல்லதந்தையை உண்மையாக நேசித்தாயா?
அவருக்குச் செய்ய வேண்டிய பித்ருகர்மத்தைச் செய்.
தாயை உண்மையாக நேசித்தாயா?
அவருடைய நினைவால் உன்னுடைய தர்ம வாழ்க்கையை உயர்த்து.
கணவனை அல்லது மனைவியை நேசித்தாயா?
அவர் உன்னிடம் ஒப்படைத்த குடும்பப் பொறுப்புகளை நேர்மையாக நிறைவேற்று.
உடன்பிறந்தவரை நேசித்தாயா?
அவர் விரும்பிய நல்ல காரியங்களை நினைவில் வைத்துக்கொள்.
பாசத்திற்கு கண்ணீர் இருக்கலாம்; ஆனால் கண்ணீர் மட்டுமே பாசம் அல்ல.
9. அப்படியானால் அழவே கூடாதா?இந்தக் கட்டுரையின் கருத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.
அன்புக்குரியவரை இழந்தவுடன் இயற்கையாக ஏற்படும் மனவேதனை, கண்ணீர், துயரம் ஆகியவற்றுக்காக ஒருவரைக் குற்றம் சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் ஶாஸ்திரம் கண்டிப்பது:
அளவற்ற புலம்பல், தொடர்ந்து கதறுதல், தன்னைத்தானே வருத்துதல், மற்றவரைத் தூண்டி அழவைத்தல், செய்ய வேண்டிய கர்மத்தை விட்டுவிட்டு ஶோகத்திலேயே மூழ்கிக் கிடத்தல் ஆகியவற்றைத்தான்.
யாஜ்ஞவல்க்யருடைய வார்த்தை இங்கே தீர்மானமாக நிற்கிறது:
“அதோ ந ரோதிதவ்யம் ஹி
க்ரியாஃ கார்யாஃ ஸ்வஶக்திதஃ”
“ஆகையால் அழுதுகொண்டிருக்க வேண்டாம்; தன் சக்திக்கேற்ப செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்ய வேண்டும்.”
இதுதான் தர்மத்தின் நடைமுறைப் பதில்.
10. “நான் பாவி; என்னால்தான் அவர் இறந்தார்” — உங்களை நீங்களே தண்டிக்காதீர்கள்உங்களால் செய்யக்கூடிய சிகிச்சையைச் செய்தீர்களா?
உங்களால் முடிந்தவரை பார்த்துக்கொண்டீர்களா?
உங்கள் அறிவுக்கும் சக்திக்கும் உட்பட்டு முயன்றீர்களா?
அதற்குப் பிறகும் மரணம் நிகழ்ந்துவிட்டதா?
அப்படியானால் நடந்ததை தினமும் மனத்திற்குள் விசாரணை செய்து,
“நான் குற்றவாளி… நான் பாவி… என்னால்தான்…”
என்று உங்களை நீங்களே தண்டித்துக்கொள்ளாதீர்கள்.
மஹாபாரதம் சொல்லும்,
“காலோ ஹி துரதிக்ரமஃ”
என்ற வார்த்தையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நாம் முயற்சி செய்ய வேண்டிய இடத்தில் முயற்சி செய்ய வேண்டும்.
ஆனால் நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட முடிவுகளுக்கும் நம்மையே முழுமையான காரணமாக்கிக் கொள்ளக்கூடாது.
11. இறந்தவருக்கு நாம் உண்மையில் என்ன செய்ய வேண்டும்?கதறிக்கொண்டிருப்பதை விட கர்த்தவ்யம் முக்கியம்.
தர்மஶாஸ்திரம் கூறியபடி அவருக்குரிய அபரகர்மங்கள், தசாஹம், ஏகோதிஷ்டம், ஸபிண்டீகரணம், மாஸிகம், ஆப்திகம், தொடர்ந்து செய்ய வேண்டிய ஶ்ராத்தம் முதலானவற்றைத் தத்தம் அதிகாரம், குடும்ப சம்ப்ரதாயம், ஸூத்ரம் மற்றும் ஆசார்ய வழிகாட்டுதலுக்கு ஏற்ப முறையாகச் செய்வதே முக்கியம்.
இறந்தவரின் நினைவை வெறும் கண்ணீராக மாற்றாதீர்கள்; கடமையாக மாற்றுங்கள்.
அதுவே ஶாஸ்திரபூர்வமான பாசத்தின் உயர்ந்த வெளிப்பாடு.
முடிவுரைமரணம் என்பது உறவின் நினைவை அழிக்கலாம் என்று யாரும் சொல்லவில்லை.
தந்தையை மறக்க வேண்டியதில்லை.
தாயை மறக்க வேண்டியதில்லை.
கணவனையோ மனைவியையோ மறக்க வேண்டியதில்லை.
மகனையோ மகளையோ உடன்பிறந்தவர்களையோ மறக்க வேண்டியதில்லை.
ஆனால் அவர்களுடைய நினைவை நம்மை அழிக்கும் துக்கமாக மாற்றக்கூடாது.
பகவான் சொல்கிறான்:
“ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுஃ…”
பிறந்தவனுக்கு மரணம் தவிர்க்க முடியாதது.
மஹாபாரதம் சொல்கிறது:
“காலோ ஹி துரதிக்ரமஃ”
காலத்தைத் தாண்டுவது அரிது.
யாஜ்ஞவல்க்யர் சொல்கிறார்:
“ந ரோதிதவ்யம் ஹி; க்ரியாஃ கார்யாஃ ஸ்வஶக்திதஃ”
அழுதுகொண்டிருப்பதை விட செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்.
கருடபுராணம் துக்கத்தில் இருப்பவரிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது?
“ஶோகாபநோதம் குர்வீத” — அவரது ஶோகத்தை நீக்க வேண்டும்.
எனவே துக்க வீட்டிற்குச் செல்பவர்களுக்கும் ஒரு தர்மம் இருக்கிறது:
அழாதவரை அழ வைக்காதீர்கள்.
தேறியவரை மீண்டும் உடைக்காதீர்கள்.
கண்ணீரைக் கொண்டு பாசத்தை அளக்காதீர்கள்.
“நீ காப்பாற்றியிருக்கலாம்” என்று குற்றவுணர்ச்சியை விதைக்காதீர்கள்.
நடந்ததை நூறு முறை சொல்ல வைத்து அந்தக் குடும்பத்தின் காயத்தை மீண்டும் மீண்டும் திறக்காதீர்கள்.
அவர்களிடம் சொல்ல வேண்டியது ஒன்றுதான்:
“உங்களால் முடிந்த கடமையைச் செய்தீர்கள். இனி அவருக்குச் செய்ய வேண்டிய தர்மத்தை முறையாகச் செய்யுங்கள். அவருடைய நல்ல நினைவுகளைத் தாங்கிக்கொண்டு உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள்.”
ஏனெனில் —